பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் !

107

பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்ச ரூபாயை இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த சில பெண்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் திருச்சியைச் சேர்ந்த இளமுகில் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் பெயர் விவரங்களையும், அவர்கள் தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டுமாறு கொண்டுள்ளார். இதையடுத்து, பொள்ளாச்சி பெண்களின் ஆபாச வீடியோவை இணையதளங்களில் இருந்து நீக்கவும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைத்து, சிபிஐக்கு மாற்றும் அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பொள்ளாச்சி பலாத்காரம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை வைத்திருப்பது குற்றம் என தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தங்கள் வரம்பில் வராது என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.