நான்கு நாட்களுக்கு சி.பி.சி.ஐ.டி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி !

106

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை, 4 நாட்களுக்கு சி.பி.சி.ஐ.டி காவலில் வைத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததுடன், வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த தகவல்களை பொதுமக்கள் தொலைநகல் மற்றும் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில்ட, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை இன்று ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கோவை நீதிமன்ற வளாகத்தில், மகளிர் அமைப்பினர் மற்றம் பொதுமக்கள் கூடியதால் பதற்றம் நிலவியது. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குறிவிக்கப்பட்டனர். நேரில் ஆஜர்படுத்தமுடியாத சூழல் ஏற்பட்டதால், திருநாவுக்கரசை காணொலி காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீண்ட நேர விசாரணைக்குப் பின், குற்றவாளி திருநாவுக்கரசை நான்கு நாட்களுக்கு சி.பி.சி.ஐ,டி. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதனிடையே திருநாவுக்கரசுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் எலிசபெத் செய்தியாளர்களிடம் பேசுகையில், காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தியதற்கு கண்டனம்தெரிவித்தார்.