2004 ஆம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு அரசியல் கட்சிகள் 11 ஆயிரத்து 350 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

296

டெல்லியில் செயல்படும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2004 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு 11 ஆயிரத்து 350 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 3 ஆயிரத்து 982 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. பா.ஜ.க. கட்சி 3 ஆயிரத்து 272 கோடி ரூபாய் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாநில கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி 820 கோடி ரூபாயுடன் முதல் இடத்தையும், 203 கோடி ரூபாயுடன் திமுக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 165 கோடி ரூபாய் பணத்துடன் அதிமுக மூன்றாவது இடத்தில் உள்ளது. இதில், அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் வருவாயில் பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் மூலம் கிடைத்த நன்கொடை 69 சதவீதம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.