ஆளுநர் பன்வாரிலால் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் : பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

290

சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி உடலுக்கு அரசியல் தலைவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் பன்வாரிலால், கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பழனிசாமி, கருணாநிதி மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்று கூறினார். இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை தலைவர் டிடிவி தினகரன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக பா.ஜ. க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோரும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்ணீர் மல்க கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவனுடனும் வந்து அஞ்சலி செலுத்தினார். லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்திர், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தா.பாண்டியன், நல்லக்கண்ணு, முத்தரசன் உள்ளிட்டோரும், தேசிய பா.ஜ.க செயலாளர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோரும் கருணாநிதி உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கருணாநிதி உடலுக்கு மரியாதை செலுத்திய பின் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார். தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி உள்ளிட்டோரும் கருணாநிதி உடலுக்கு மரியாதை செலுத்தினர்.