நாடாளுமன்றத்தில் தன்னை பேச எதிர்க்கட்சிகள் அனுமதிக்காததால், மக்கள் மன்றத்தில் விளக்கம் அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

219

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். தீசா பகுதியில் பால் கூட்டுறவு ஆலையை மோடி துவக்கி வைத்தார். பின்பு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஏழை மக்களின் வளர்ச்சிக்காகவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதற்கு முன்பு 100 ரூபாய்க்கு மதிப்பு இருந்ததா என்று கேள்வி எழுப்பிய பிரதமர், ரூபாய் நோட்டு விவகாரத்தால், தீவிரவாதம் வலுவிழந்து இருப்பதாக குறிப்பிட்டார். மின்னணு பரிமாற்ற நடைமுறைக்கு அனைவரும் மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், 50 நாட்களுக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று உறுதியளித்தார். நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருவது பற்றி, குடியரசு தலைவர் வேதனை தெரிவித்து இருப்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், மக்களவையில் தன்னை பேச எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.