பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..!

196

பூடானின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் எனவும், இதில் இந்தியா பெருமை கொள்கிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ளார். நேற்று பாரோ விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங் வரவேற்றார். பாரா விமான நிலையத்திலிருந்து, பூடான் தலைநகர் திம்புவுக்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, சாலையோரம் திரண்டிருந்த மக்கள் இந்திய மற்றும் பூடான் தேசிய கொடிகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திம்பு சென்றடைந்த பிரதமர் மோடியை, பூடான் வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். பின்னர் பூடான் மன்னர் ஜிக்மே சேஷர் நம்கியால் வாங்சுக்கை சந்திக்க பிரதமர் மோடி சென்றார். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் டஷிச்சோஷாங் மாளிகைக்கு பிரதமர் மோடி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மன்னர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமரின் பூடான் பயணத்தில் இரண்டாம் நாளான இன்று, திம்புவில் உள்ள பூடான் ராயல் பல்கலைக்கழக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்..

அப்போது, பூடானுக்கு வருகை தரும் யாருமே, இந்நாட்டின் இயற்கை அழகைக் கண்டு, பூடான் மக்களின் அரவணைப்பு மற்றும் எளிமை, அன்பால் ஈர்க்கப்படுகின்றனர் என்றும், உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், தான் எழுதிய “எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகத்தில் புத்தரின் போதனைகள், கருத்துக்களை வெளிப்படுத்தி இருப்பதாகவும், வெகு விரைவில், பூடானில் பலர் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களாக இருப்பார்கள் என்று தான் நம்புவதாகவு, பூடானின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.