100 கோடி போதாது – முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

151

கேரளாவில் கடந்த இரண்டரை மாதங்களாக பெய்து வரும் கனமழை கடும் அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், 186 பேர் உயிரிழந்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துவருகிறது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வேறு இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 10 கம்பெனி ராணுவத்தினர், சென்னை ரெஜிமென்டை சேர்ந்த ஒரு குழுவினர், கப்பல் படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணையில் இருந்து நேற்றும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் துணை அணையான செருதோனி அணையில் 5 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறுவதால் ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை பகுதியில் பெய்துவரும் மழையால் அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பம்பையில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. பம்பையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி, கடைகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் தற்போது வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கனமழையால் பத்தாயிரம் கிலோ மீட்டர் சாலைகள், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக கூறினார். 8 ஆயிரத்து 316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், மத்திய அரசு ஒதுக்கியுள்ள 100 கோடி ரூபாய் போதாது என்று தெரிவித்தார். மீண்டும் சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.