தனியார் குடோனில் பெட்ரோல் குண்டு வீச்சு , ரூ.4 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பல்.

187

திருச்செங்கோடு அருகே தனியார் குடோனில் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 4 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலானது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அமைந்துள்ளது ஆண்டிப்பாளையம். அப்பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மற்றும் அவரது சகோரதரர் அர்த்தநாரி தறிப்பட்டறை ஒன்றை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தறிப்பட்டறைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குடோனுக்கு வந்த மர்மகும்பல் பெட்ரோல் குண்டு வீசி குடோனுக்கு தீ வைத்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 4 கோடி மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பாளையம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.