பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

208

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் நேற்று முன்தினம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, டெல்லி உயர்நீதிமன்றத்தில், பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்துவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மத்திய அரசின் மறைமுக உத்தரவின் பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலையை நிர்ணயிக்க உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.