எரிபொருள் விலை உச்சத்தை எட்டியதால், வாகனஓட்டிகள் அவதி..!

269

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியதை அடுத்து, வாகன ஓட்டிகள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, எரிபொருட்கள் விலையில் சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 82 ரூபாய் 24 காசுகளுக்கும், டீசல் விலை 42 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 74 ரூபாய் 77 காசுகளுக்கும் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் அவதிப்படும் வாகன ஓட்டிகள், மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, பெட்ரோல், டீசல் விலையேற்றம் தற்காலிகமான ஒன்றுதான் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவு, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு குறைவு போன்ற காரணங்களால் விலையேறுவதாக கூறிய அவர், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.