ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என பீட்டா அறிவிப்பு !

223

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தால், அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் வெடித்ததையடுத்து, அவசர சட்டம் கொண்டுவர பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு, உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இந்தநிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால், அதனை சட்ட வழிமுறைகள் மூலம் எதிர்கொள்வோம் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. தவறான புரிதல்களின் அடிப்படையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடர்ந்து ஆதரிப்போம் எனவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.