ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

485

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக காலா, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஃபெப்சி அமைப்பின் கீழ் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஃபெப்சி ஊழியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஊதியம் ஒப்பந்தம் குறித்த மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், ஃபெப்சி தொழிலாளர்கள் உடனான ஒப்பந்தம் ரத்து என்றும், இனி தயாரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் பணிக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடக்கவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பு மற்றும் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் உள்ளிட்ட 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் சிதம்பரத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும், தங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.