மறைந்த நடிகர் ‘பசி’ நாராயணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆவணத்தை வழங்கினார்.

345

மறைந்த நடிகர் ‘பசி’ நாராயணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆவணத்தை வழங்கினார்.
எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் “பசி” நாராயணன். அவரது மறைவுக்குப் பின்னர், குடும்பத்தினர் எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதை ஊடகங்கள் வாயிலாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிந்தார். இதைத்தொடர்நது, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து “பசி” நாராயணன் மனைவி வள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிட அவர் உத்தரவிட்டார். அதன்படி, “பசி” குடும்பத்தினரை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்த ஜெயலலிதா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை வழங்கினார்.
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்படும் இந்த நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 8 ஆயிரத்து125 ரூபாய் வள்ளிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்தினருடன் வந்திருந்த வள்ளி, தமிழக அரசுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.