தினகரன் கட்சி அலுவலகம் செல்லும் முன் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல்

243

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை டிடிவி தினகரன் இன்று வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் விதித்திருந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதன்படி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று தினகரன் வருவார் என்றும், கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரளான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனிடையே, சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில்
எம்எல்ஏக்கள் தோப்பு வெங்கடாச்சலம், குடியாத்தம் ஜெயந்தி, அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், முன்னாள் எம்பி. ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் டிடிவி தினகரனை சந்தித்தனர். கட்சி அலுவலகம் செல்வது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கட்சி அலுவலகம் செல்வதற்கு முன்பாக முதலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் நான்கு கட்டங்களாக அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக தனது சுற்றுப்பயணத்தை தெற்கு மண்டலத்தில் இருந்து தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிகிறது.