டெல்லிக்குள் பாக். தீவிரவாதிகள் ஊடுருவல்: பாராளுமன்றத்தை தாக்க சதி! பாதுகாப்பு, கண்காணிப்பு அதிகரிப்பு!!

263

புதுடெல்லி, ஜூலை.25–
பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பாராளுமன்றம் உள்ளிட்ட முக்கிய கேந்திரங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த சதி திட்டம் வகுத்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலையடுத்து பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கடந்த 9-ந் தேதி தீவிரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.காஷ்மீர் சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்க பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தீவிரவாதி களின் தற்கொலைப் படை ஒன்று தலைநகர் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதை உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு ஒரு தகவலை உளவுத்துறை அனுப்பியுள்ளது.

அதில், ‘பாராளுமன்றம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகம், எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகம் உள்ளிட்ட கேந்திரங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளை குறி வைத்தும் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று உளவுத்துறை எச்சரித் துள்ளது.

இதையடுத்து டெல்லி யில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக எல்லை பாதுகாப்புப் படை மற்றும் துணை நிலை ராணுவ அலுவலகங்களில் பாதுகாப்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர முக்கிய அதி காரிகள் சென்று வரும் பகுதிகளில் போலீஸ் கண் காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் வேளையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.