செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மாநிலங்களவை செயல்பாடுகளும் முடக்கம்.

235

ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதையடுத்து, மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை இதுவரை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய இரண்டாவது நாளில், இருஅவைகளிலும், எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெறக்கோரி அமளியில் ஈடுபட்டன.

மக்களவையில் பேசிய காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே, ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பண பரிமாற்றம் தொடர்பாக ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு வழி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, எதிர்க்கட்சியினர் கோஷமிட்டபடி, அவருடைய இருக்கையை முற்றுகையிட்டு, அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மக்களவை 12 முப்பது மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், இதேநிலை தொடர்ந்ததால், மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் இதே நிலை நிலவியது. சபாநாயகர் அன்சாரி, பணம் செல்லாது குறித்த ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்காமல், கேள்வி -பதில் நேரத்தை எடுத்துக்கொள்வதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதோடு, அவையின் நடுப்பகுதிக்கு சென்று கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து 11. 30 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவை தொடங்கிய போது, எதிர்க்கட்சி எம்பிகள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 2வது முறையாக மாநிலங்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், இதேநிலை தொடர்ந்ததால், 12.30 மணி வரையும், 2 மணி வரையும், பின்னர் 3 மணி வரையும் என ஐந்து முறை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.