பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முத்தலாக், குடியுரிமை சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…

103

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், முத்தலாக் தடை சட்ட மசோதா, குடியுரிமை சட்ட மசோதா ஆகியவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவியதால் மசோதாக்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முத்தலாக் தடைச் சட்ட மசோதா, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் கொண்டுள்ளது.

மாநிலங்களவையின் இன்றைய அலுவல் பட்டியலில் இந்த இரு மசோதாக்களும் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் 49 அரசு மசோதாக்கள் மற்றும் 130 தனி நபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதே போன்று மக்களவையில் 25 அரசு மசோதாக்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இத்தொடரின் போது மக்களவையில் இரண்டு மசோதாக்கள் மட்டுமே நிறைவேறியுள்ளன.