மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் ; மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு..!

272

மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டநிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 18 நாட்கள் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . கூட்டத்தொடர் துவங்கியதும், மக்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். பின்னர், பசு பாதுகாவலர்கள் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி, அவையில் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிரத்யா சிந்தியா, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். பாஜக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். சமாஜ்வாடி மற்றும் தெலுங்கு தேசம் எம்பிக்கள் பசு பாதுகாவலர் தாக்குதல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்பி-க்கள் சோனல் மான்சிங், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா மற்றும் சிற்பக்கலைஞர் ரகுநாத் மஹாபத்ரா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இ்தனையடுத்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்கு தேசம் எம்பி-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தெலுங்கு தேசம் எம்பிக்கள் கோஷமிட்டதை அடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.