பண்ருட்டி பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு!

389

சென்னை, ஜூலை.30–
திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இதைப்போல வெவ்வேறு ஊர்களை சேர்ந்த தனித்துவம் வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி பலாப்பழம் அலாதி ருசியுடையது. பண்ருட்டி மண்ணின் தன்மையும், நீர்வளமும் சீதோஷ்ண நிலையும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பண்ருட்டி பலாப்பழம் ஏற்றுமதியாகிறது. பழங்களிலேயே மிகவும் பெரியது பலா என்பது குறிப்பிடத்தக்கது. குடக்கனி என்றும் இது குறிப்பிடப்படுகிறது.
பண்ருட்டி பலாப்பழம், மானாமதுரை கடம், சென்னை செக்ஸ் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தெரிகிறது.
மானாமதுரை கடம் தனித்தன்மை வாய்ந்தது. அங்குள்ள மண் சிறப்பு வாய்ந்தது. அது அடர்த்தி மிகுந்தது. மானாமதுரை கடம் இசை உலகில் மிகவும் பிரசித்திப்பெற்றது. மானாமதுரை கடத்தை பிரயோகித்து எழுப்பப்படுகின்ற இசை, நுகர்வோரை சுண்டி இழுக்கிறது.
மெட்ராஸ் செக்ஸ் என்பது மிகவும் பிரபலமானது. இத்துணி கையால் நெய்யப்படுவதாகும். இருபுறமும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். பெரும்பாலும் சிறு சிறு கட்டங்கள் பளிச்சிடும். தண்ணீரில் துவைத்தால் சற்று சுருங்கும். எனவே இதை ஆடையாக தயாரிப்பதற்கு முன் தண்ணீரில் நனைய வைத்து காயவைக்க வேண்டும்.
மெட்ராஸ் செக்சின் இன்னொரு சிறப்பு இயற்கை சாயம் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதாகும்.