பனிமயமாதா பேராலயத்தின் 435 -ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

339

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 435-ம் ஆண்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 -ம் தேதி திருவிழா தொடங்கும். இந்த ஆண்டு, திருவிழா தொடக்கத்தையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதனைத் தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் பனிமயமாதா உருவம் பொறித்த கொடி ஆலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, முன் பக்கத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. பேண்டுவாத்தியம் முழங்க, ஆயர் இவான் ஆம்புரோஸ் கொடியை ஏற்றினார். இந்த கொடியேற்ற நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது புறாக்களும், வண்ணவண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
இன்று தொடங்கிய தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா, ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும் மாதாவின் சப்பர பவனி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவையொட்டி தொடர்ந்து 10 நாட்களுக்கு சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி, இலங்கை, சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்சேர்ந்த 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.