ஆந்திர அரசு 28 தடுப்பணைகள் கட்டியதால் வறண்டுபோன பாலாறு..!

360

தமிழகத்தில் பாலாறு, தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய நீர்வள அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, தமிழகத்தில் அதிகப்படியாக 222 கிலோ மீட்டர் தூரம் ஓடி காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 28 தடுப்பணைகளை கட்டியுள்ளதால், தமிழகத்தில் பாலாறு வறண்டு போய்விட்டது. இதேபோல, கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக கடலூரில் கடலில் கலக்கிறது. தென்பெண்ணையாறு மூலம் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதையும், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்கவும் தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், பாலாறு பெண்ணையாறு நதிகள் இணைப்புக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், வேலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தீர்ந்து, விவசாயிகளும் பயனடைவார்கள் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.