வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

137

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110 ன் கீழ் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.கஜா புயல் தாக்கத்தாலும் பருவமழை பொய்த்ததன் காரணமாகவும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு வறுமைக் கோட்டுக்கீழே வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவரும் ஏழைக்குடும்பங்களுக்கு இந்தாண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.

இதனால் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் குடும்பங்களும், நகரப்பகுதிகளில் உள்ள 25 லட்சம் குடும்பங்களும் ஆக மொத்தம் 60 லட்சம் குடும்பங்கள் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். இதற்காக 1200 கோடி ரூபாய் 2018-19 துணை மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.