கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

221

கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு பிரிதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்க அதிகபட்சமாக 20 சதவீதம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்கள் வைப்பீட்டு தொகையை அதிகரித்து இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும் என அளிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக அந்த அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புதிய ஊதிய உயர்வால் 22 ஆயிரத்து 48 பேர் பயன்பெறுவார்கள் எனவும், இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 143 கோடியே 72 லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.