நாகை மீனவர்கள் மீது பொய் வழக்கு தொடர்பாக முதல்வரை இன்று சந்தித்து முறையிட மீனவர்கள் முடிவு..!

247

ஆந்திர கடற்பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து முறையிட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 7ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆந்திர கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் மீது அம்மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் ஆந்திர மாநிலம் சென்னபாளையம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது ஆந்திர காவல் துறையினர் பொய் வழக்கு போடுவதாக வந்த தகவலை அடுத்து நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.