பாகிஸ்தான் விலங்கியல் பூங்கா ஒன்றில், பல வருடங்களாக தனிமைப்படுத்தி, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள யானையை சுதந்திரமாக நடமாட விடவேண்டும் என்று, அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும் பாப் பாடகியுமான செர்,டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

177

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளது முராகஷார் உயிரியல் பூங்கா. இங்குள்ள காவன் என்ற ஆண் யானை, கடந்த 1980-ஆம் ஆண்டு இலங்கை அரசால் பாகிஸ்தானுக்கு பரிசளிக்கப்பட்டது. காவனுடன் எப்போதும் சுற்றித் திரியும் பெண் யானை 2012-ஆம் ஆண்டு இறந்து போனதால், காவனின் நிலை பரிதாபமானது. சோகத்துடன் தனியாக அலைந்து திரிந்த காவன், கடந்த 5 ஆண்டுகளாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பழைய குடில் ஒன்றும், அழுக்கு நீரைக் கொண்ட தடாகமும் ஒதுக்கப்பட்டதால், காவனின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளது.

இதை அறிந்த, அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும், பாப் பாடகியுமான செர், கௌனி என்ற தனது உதவியாளரை இஸ்லாமாபாத் அனுப்பியிருந்தார். காவன் யானையின் பரிதாப நிலை உண்மை என்பது உறுதியானதை அடுத்து, யானையை சங்கிலியில் இருந்து விடுவித்து, சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவேண்டும் என்றும், காவனுக்குத் துணையாக பெண் யானை ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.