திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 8 வைரக்கற்கள் திருட்டு | பக்தர்கள் அதிர்ச்சி.

398

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு வைரக்கற்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள, உலக பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில், கடந்த 2011-ஆம் ஆண்டு பல ரகசிய அறைகள் இருப்பது தெரியவந்து, அவற்றில் நடத்திய சோதனைகளில், ஏராளமான அளவுக்கு தங்க, வெள்ளி, வைரம் மற்றும் நவரத்தின ஆபரணங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஆபரணங்களின் மதிப்பு பல கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோவிலில் இருந்து எட்டு வைரக்கற்கள் திருடு போய் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அனந்த பத்மநாப சிலையில், நெற்றியில் வைக்கப்படும் நாமத்தில் இந்த வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எட்டு வைரக்கற்களை காணவில்லை. இந்த நாமம் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சாத்தப்பட்டு, பின்னர் கோவில் கருவறைக்கு அருகே உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். அதுபோல வைக்கப்பட்டிருந்த நிலையில், எட்டு வைரக்கற்கள் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கடந்த மே மாதமே கோவில் நிர்வாக அதிகாரி கே.என்.சதீஷ் புகார் அளித்துள்ளார். இந்த வைரக்கற்களின் மதிப்பு, அதன் பாரம்பரியத்தை வைத்து கணக்கிட்டால் பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளைச்சம்பவம் தொடர்பாக, திருவனந்தபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.