தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிப்பு..!

209

தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட கால நீட்டிப்பு செய்யக்கோரி, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் டெல்லி சென்று, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம், முதல்வர் கடிதத்தை, நேரில் கொடுத்து, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துரைத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் செப்டம்பர் 30 வரை செயல்படும் என ஆணையிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. எனவே, தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செயல்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம், தங்களது நெல்லை கொள்முதல் செய்து பயன் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.