ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர் – ப.சிதம்பரம்

324

ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்பதன் அடிப்படையில் கடந்தாண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் நாட்டின் வேலை வாய்ப்பு, சீர் குலைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், ஜிஎஸ்டியின் வடிவம், கட்டமைப்பு முறை, வரி விதிப்பு மற்றும் அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றால் தொழிலதிபர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சாமானியர்களிடையே ஜிஎஸ்டி என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறியுள்ளது என விமர்சித்துள்ளார். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால், ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.