நாட்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு.

125

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால், நாட்டில் ஊழல் முறைகேடுகள் கட்டுக்குள் வரவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஜன்வேதனா என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால், நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
70 நாட்களுக்கும் மேலாக வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய ப.சிதம்பரம், மொத்த உள் நாட்டு உற்பத்தியில் பெரும் பின்னடைவை இந்தியா சந்திக்கும் என்றும், நாட்டுக்கு இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய சொல்ல மோடிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறிய ப.சிதம்பரம், பணமோ, கார்டோ எதுவானாலும், அதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ரூபாய் வாபஸ் அறிவிப்பால், நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என்று கூறுவதையும் ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.