எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது – முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்

77

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், பா.ஜ.க. அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி ஏழைகள் இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார். மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுபவரும் ஏழை என்றால் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் எனவும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.