ஏராளமான ஏடிஎம்-களில் பணம் நிரப்பப்படாததால் பல ஏடிஎம்-கள் அவுட் ஆப் சர்வீஸ்..

232

ஏராளமான ஏடிஎம்-களில் பணம் நிரப்பப்படாததாலும், பல ஏடிஎம்-கள் அவுட் ஆப் சர்வீஸ் எனப்படும் செயல்பாடற்ற நிலையில் இருப்பதாலும் பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக பணம் எடுக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்-கள் இன்று முதல் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக பணம் எடுக்க, ஏடிஎம் மையங்களின் முன் குவிந்தனர். இந்த நிலையில், ஒரு சில ஏடிஎம் மையங்களில் அவுட் ஆப் சர்வீஸ் என அறிவிப்பு பலகை போடப்பட்டிருந்தால், மக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், பல ஏடிஎம்-களில் பணம் நிரப்பப்படாததால், பொதுமக்கள் தங்கள் கார்டுகளைக்கொண்டு பணம் எடுக்க முயன்றபோது, பணம் வராததால், பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, சென்னையில் இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு மணி நேரம் சென்றபின், பொதுமக்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, வெறும் இரண்டாயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் மட்டும் ஏடிஎம்-களில் நிரப்பப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இரண்டாயிரம் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என இந்தியன் வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.