முதலமைச்சரை சிரிக்க வைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை : ஓ.பன்னீர் செல்வம்

275

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில்எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, தர்மயுத்தம் தொடங்கி 6 மாதக்காலம் நிறைவு பெற்று விட்டதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தற்போது புதிய கூட்டணி உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். மறைமுகமாக கைகோர்த்து எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் பொய்யர்களாக நாடகமாடி வருவதாக குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை போன்று ஒரு முதலமைச்சரை இதுவரை தாம் பார்த்தது கிடையாது என்று கூறிய பன்னீர்செல்வம், மக்கள் பிரச்சனையில் சிறிதளவு கூட அவருக்கு அக்கறையில்லை என்று குற்றம் சாட்டினார். வாய் மூடி மௌன சாமியாக முதலமைச்சர் வலம் வருவதாக சாடிய பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை யாராவது சிரிக்க வைத்தால் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் நகைச்சுவையுடன் கூறினார்.