வர்தா புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

274

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்தா புயல் நிவாரணம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மின்வாரியத்துக்கு 350 கோடி ரூபாயும், சென்னை மாநகராட்சிக்கு 75 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர்,

மீனவர்களுக்கு நிவாரண தொகையாக 10 கோடியும், நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 10 கோடி ரூபாயும், போக்குவரத்து சிக்னல்களை சரிசெய்ய 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப்பணித்துறைக்கு 7 கோடி ரூபாயும், சுகாதார பணிகளுக்கு 3 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.