இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஒதுக்கீடு என அதிகாரப் பூர்வ அறிவிப்பு ..!

1212

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவுப்பட்டதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து, சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈ.பி.எஸ் மற்றும் தினகரன் அணியினர் தீவிரமாக ஈடுபட்டனர். இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக இறுதி விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு அடிப்படையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பெயரை ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் பயன்படுத்திக்கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தினகரன் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடுவார்கள் என தெரிகிறது.