ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோக வாய்ப்பு | அதிமுகவில் தொடரும் குழப்பம் !

581

சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததால் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் கொறடா ராஜேந்திரன் அக்கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார். அதனை மீறுபவர்கள் பதிவியிலிருந்து நீக்கப்படுவர் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். அக்கட்சியின் கொறடா உத்தரவை மீறியதால், இவர்களின் எம்.எல்.ஏ. பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து, கொறடாவாக செம்மலையும், முதல்வர் பழனிச்சாமி அணியின் கொறடாவாக ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அதிமுகவின் கொறடா நியமனம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அவர்கள்
எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.