சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற 70 பெண்களை மீட்க வேண்டும்! தப்பி வந்த பெண் கண்ணீர் பேட்டி!!

477

ஊட்டி: சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற ஊட்டியை சேர்ந்த பெண் சித்ரவதை தாங்காமல் தப்பி ஓடி வந்து கண்ணீர் பேட்டி கொடுத்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மங்குழி பகுதியை சேர்ந்தவர் சுமா. இவரது மகள் லிசா (23). இவர் கடந்த ஜூன் மாதம் ஏஜெண்டுகள் மூலம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற சில நாட்களில் அவரிடம் இருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது. அவர் வேலை பார்க்கும் வீட்டில் லிசாவை அதிக சித்ரவதை செய்வதாகவும், வேலையை முடித்த பிறகும் அவரை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த தகவலை பார்த்த அவரது பெற்றோர் இதுகுறித்து உடனடியாக இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் அந்த பெண் சித்ரவதை தாங்காமல் சவுதியில் இருக்கும் தமிழர்கள் உதவியுடன் தப்பி இந்தியாவிற்கு தப்பி வந்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
என்னை போன்று சவுதி அரேபியாவில் இந்தியாவில் இருந்து 150 பேரும், தமிழகத்தில் இருந்து 70 பெண்களும் வீட்டு வேலைக்காக ஏஜெண்டுகள் மூலம் சென்றோம். ஆனால் நாங்கள் சென்றவுடன் எங்களது நிலை தலைகீழாக மாறியது. வீட்டு வேலை என்ற பெயரில் எங்களை தினம் தினம் சித்ரவதை செய்வது அன்றாட நிகழ்வாக நடந்து வந்தது. ஒருவேளை சோற்றுக்கு கூட நாங்கள் அவர்களிடம் கண்ணீருடன் கெஞ்சும் சூழல் ஏற்பட்டது.
இதனால் நான் உடனடியாக இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்தேன். இந்த தகவலை வாட்ஸ்அப் மூலம் எனது உறவினர்களுக்கு தெரிவித்தேன். இந்த நிலையில் அவர்களது சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனை தாங்க மாட்டாமல் அங்குள்ள தமிழர்கள் மூலம் தப்பித்து இந்தியா வந்தேன். என்னை போன்று ஏழைப் பெண்களை ஏஜெண்டுகள் குறி வைத்து வீட்டு வேலை என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த ஏஜெண்டுகள் அவர்களிடம் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பெற்றுக் கொள்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் எங்களிடமும் ரூ.2 லட்சம் பெற்று கொள்கின்றனர்.
எனவே சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற என்னை போன்ற 70 தமிழ் பெண்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்று மோசடி செய்யும் ஏஜெண்டுகள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.