கேரளாவில் களைகட்டாத ஓணம்..!

584

வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளின் சுவடுகள் மறையாத நிலையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.

கேரளாவில் ஓணம் பண்டிகை என்பது வருடந்தோறும் 10 நாட்களுக்கு களைகட்டும். ஏழைகள் கூட தடபுடல் விருந்து சமைத்து, அத்தப்பூ கோலமிட்டு, ஆடிப்பாடி மகிழ்வார்கள். ஆனால் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஏதுமின்றி ஒதுங்கி நிற்கிறது. கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வற்றவில்லை. 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் மாயமான பலரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வீடு, வாசல் என எல்லாமே சிதைந்து உருக்குலைந்து போயுள்ளது. பெரும்பாலான பகுதிகள் சேறும், சகதியுமாக கிடக்கிறது. சொந்த பந்தங்களை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களால் ஓணத்தை வரவேற்று கொண்டாட முடியவில்லை.

கவலையின் ரேகை முகத்தில் படிந்த பொதுமக்களால் களைகட்டாமல் இருக்கிறது ஓணம். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை ஓணம் பண்டிகையை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இங்கே அத்தப்பூவை கண்டு ரசித்து ஊஞ்சலாடி மகிழ்ந்து ஓணத்தை கொண்டாடுவார்கள். தற்போது கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படாத நிலையில் அலங்காரங்கள், கோலங்கள் ஏதுமின்றி களையிழந்து காட்சியளிக்கிறது பத்மநாபபுரம் அரண்மனை. இதனால் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.