ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் : அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..!

352

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று படையெடுத்தனர். கூட்ட நெரிசலை குறைக்க கோயம்பேட்டிலிருந்து 980 சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கியது. ரயில்களில் டிக்கெட் தீர்ந்து விட்டதால் ஏராளமானோர் ஆம்னிபேருந்துகளில் டிக்கெட் எடுத்துள்ளனர். ஆனால் வழக்கம்போல் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து,சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக கட்டணம் வசூலித்த 15 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும், கட்டணத்தை திரும்பப் பெற்று  பயணிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.