ஓகி புயல் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிப்பு ..!

515

ஓகி புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளநிலையில், இணையதளம், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளும் முடங்கின. பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து தடைபட்டது, பலத்த மழையினால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. கன்னியாகுமரிக்கு செல்லும் ரயில்கள் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனிடையே, 3 மாவட்டங்களிலும் மழை பாதித்த பகுதிகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதிலும், மின் விநியோகத்தை சீராக்குவதிலும் முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர பகுதிகள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் அறிவித்துள்ளார்.