ஒடிசாவில் இடி, மின்னலுடன் பெய்த கன மழை மின்னல் தாக்கி 30 பேர் உயிரிழந்த பரிதாபம்!

420

ஒடிசாவில் இடி, மின்னலுடன் பெய்த கன மழையால், 30 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் டெல்லி, அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரசேதம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அசாமில் 28 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 37 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் மழைக்கு 26 பேரும், மேகாலயாவில் 3 பேர் வெள்ளத்தில் பலியாயினர். பீகார் மாநிலத்தில் பல ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்வதால் அதில் 2 சிறுமிகள் அடித்துச் செல்லப்பட்டனர். வட மாநிலங்களில் மழைக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது. கடந்த புதன்கிழமை டெல்லி உட்பட அதன் சுற்றுப்பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடானது.

இந்நிலையில் ஒடிசாவில் நேற்று காலை 11.30 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. பாலசூர் மாவட்டம் பத்ராக் பகுதியில் இடி தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 8 பேர் பலியாயினர், 2 பேர் காயம் அடைந்தனர். குர்தா மாவட்டம் சுந்தர்பூர் கிராமத்தில் 5 பேரும், கேந்திரபாரா, சம்பல்பூர், கேயான்ஜர், ஆகிய மாவட்டங்களில் கனமழையால் ஏராளமானோர் பலியாயினர். மொத்தத்தில் மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் மின்னல் தாக்கி ஒரே நாளில் 30 பேருக்கும் மேல் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரகூடும் என்று அஞ்சப்படுகிறது.