சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் என்ஜினியரை வெட்டிக்கொலை செய்துவிட்டு இளைஞர் தப்பிஓடியதால் பரபரப்பு நிலவியது.

213

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ஒரு பெண்ணிடம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, அந்த பெண் விலகிச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த நபர் அவரை குத்திக்கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த மக்கள் அலறிஅடித்துக்கொண்டு சிதறி ஓடினர். கொலைசெய்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

தகவல் அறிந்து சென்ற நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கொலையான பெண் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகள் சுவாதி என்பதும், செங்கல்பட்டு பரனூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் கொலைசெய்துவிட்டு தப்பிஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.