கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த பேராயரை கைது செய்ய கேரள அரசு தயக்கம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரி புகாரில், 80 நாட்களாகியும், எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொச்சியில், கன்னியாஸ்திரிகளைக் காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில், கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினரின் போராட்டம் தொடர்ந்து 8-வது நாளாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கன்னியாஸ்திரி பலாத்கார விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பேராயரைக் கைது செய்வது தொடர்பாக, காவல்துறை முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பேராயர் நேரில் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என பேராயர் பிராங்கோ மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பேராயர் பிராங்கோவைக் கைது செய்ய மாநில அரசு தயக்கம் காட்டுவதாக கேரள எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக, வாடிகனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ள நிலையில், போப் அலுவலகத்தில் வரும் பிப்ரவரி மாதம் விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.