வடமாநிலங்களில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு..!

191

வடமாநிலங்களில் புழுதிப்புயலுடன் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் வீசிய புயல் காற்றாலும், கனமழையாலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியதுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மேலும், மழை நீர் பல்வேறு பகுதிகளில் தேங்கியதை அடுத்து, அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் புயல் மழைக்கு 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும், மகாராஷ்டிராவில் 3 பேரும் மழைக்கு உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வடமாநிலங்களில் புயல் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது,