வட மாநிலங்களில் கனமழை விவகாரம் மக்களவையில் எதிரொலித்தது..!

100

அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் எம்பிக்கள் குறை கூறியுள்ளனர்.

வட மாநிலங்களில் தற்போது பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசுகையில், அசாம் வெள்ளப் பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்தார். மேலும், அசாமில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 43 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மற்றொரு காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத் பேசுகையில், பீகாரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று குறை கூறினார்.

அதன்பின்னர் பேசிய பாஜக எம்பி ராம்கிரிபால் யாதவ், காங்கிரஸ் எம்பிக்களின் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் தவறான தகவல்களை அளிப்பதாகவும் அவர் கூறினார். பீகார் மாநிலத்திற்கு மத்திய அரசு 261 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரணங்களை வழங்கி வருவதாகவும் ராம்கிரிபால் யாதவ் விளக்கமளித்தார்.