பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் ..!

1551

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சரணடைந்த பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஏப்ரல் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சித்த வழக்கில் உதவி பேராசிரியை நிர்மலா தேவியின் 5 நாட்கள் காவல் இன்றுடன் முடிந்தது. அதன்படி, சாத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு ஏப்ரல் 27 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் இன்று தனது இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார். மதுரை செல்லும் அவர் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று விசாரணை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், பேராசிரியை நிர்மலா தேவி மீது தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த மேலும் 2 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.