மற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

156

தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த தலைமுறையின்போது மற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சர்வதேச பொருளாதார கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, கருத்தரங்கில் பேசிய அவர், தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் மத்திய அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருவதாக குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமன், அடுத்த தலைமுறையின்போது மற்ற நாட்டினருக்கு இந்தியர்கள்தான் குருவாக இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று நிதி பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார். தமிழை வளர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.