பேராசிரியை நிர்மலாதேவி மீது இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல்..!

144

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், 200 பக்க இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் விருதுநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கு, விருதுநகரிலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இதனிடையே பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் ஆயிரத்து 160 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி நிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவை ஐந்து முறை விருதுநகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தநிலையில், பேராசிரியை வழக்கில் சிபிசிஐடி போலீசார் 200 பக்க இறுதிகட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.