சீனா பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு வார்த்தை..!

550

டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில், எல்லைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் வேய் பெங்ஹே ராணுவ அதிகாரிகள் உள்பட 24 உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வருகை தந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில், வேய் பெங்ஹே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், டோக்லாம் விவகாரம் மற்றும் இதர எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் சீனாவின் இறையான்மைக்கு எதிராக விளங்குவதாக பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எந்த நாட்டிற்கும் எதிராக அமையாது என நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
மேலும், இந்தியா-சீனா கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தவும், இருநாடுகள் இடையே கடந்த 2006-ம் ஆண்டு கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்ததைப் போல் ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்கவும் இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர, இரண்டு நாடுகளின் ராணுவமும் நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஹாட்லைன் எனும் தொலைபேசி சேவையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.