நிர்மலா தேவி முகத்தை கூட பார்த்தது கிடையாது – ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் ..!

1281

மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறாக வழி நடத்தியது கடும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்துள்ள ஆளுநர் பன்வாரிலால், விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்தும் என்று கூறினார்.
ஒரு வாரத்தில் சந்தானம் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று விளக்கம் அளித்த பன்வாரிலால், மாணவிகளை பேராசிரியை தவறாக நடத்தியது கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று உறுதி அளித்த அவர்,
ஒருமாத காலம் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது பற்றி விசாரிக்கப்படும் என்று கூறினார்.
என்னுடன் கலந்து ஆலோசிக்காமல் ஐவர் குழு அமைக்கப்பட்டதால் அது வாபஸ் பெறப்பட்டது என்று விளக்கம் அளித்த ஆளுநர், விசாரணைக்குழு அறிக்கை கிடைத்தவுடன் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பேராசிரியை விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், ஒருநபர் குழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் சிபிஐ விசாரணை குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட நபர் என்றும், ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்தார்.