மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..!

420

மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அள குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையின் காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. அதுவும் இன்றும் மாலைக்குள் முற்றிலுமாக நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு தற்போது, வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் நீர்வரத்துக் குறைந்துவருவதால், மாலையில் ஒகேனக்கல் அருவிக்கும் நீர்வரத்து கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. இதனிடையே, அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. முன்னதாக, காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், மெல்லமெல்ல நீர்மட்டம் குறைந்து வந்தது. மீண்டும் கடந்த 11ஆம் தேதி 120 அடியை எட்டிய மேட்டூர் அணை, நேற்றிரவு நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில், அந்த நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு தற்போது, 37 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கதவணையில் உள்ள 98 மதகுகளில் 20 மதகுகள் திறக்கப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றிலும், புதிய கட்டளை மேடு வாய்க்கால், பழைய கட்டளை மேடு வாய்க்கால், தென்கரை பாசன வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் ஆகியவற்றிலும் திறந்துவிடப்படுகிறது.